Sep 9, 2015

பத்ர் யுத்தம் மற்றும் உஹது யுத்தம்


பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 06


பதர் யுத்தம் நடைபெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் மக்கத்துக் குறைஷிகள் தந்த சொல்லொண்ணா வன்கொடுமைகளைச் சகித்தும், பொறுமையுடன் தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கவே, தாங்கள் ஏற்றுக் கொண்ட இறை மார்க்கத்தைப் பாதுகாக்கவும், தங்களது உயிர் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், அபிசீனியா மற்றும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற் கொண்டார்கள்.

இதனையும் பொறுக்கமாட்டாத குறைஷிகள் இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் அவர்கள் அடைக்கலம் தேடிச் சென்ற இடங்களிலெ;லலாம் சென்று, இஸ்லாமிய ஊற்றை அதன் ஆரம்ப பிராவகத்திலேயே அடைத்து விட, அழித்து விட நாடினார்கள். அந்த வகையில் மதீனாவிற்கு அடைக்கலம் தேடிச் சென்ற முஸ்லிம்களையும் நிம்மதியாக இருக்க விடக் கூடாது எனத் தீர்மானித்த குறைஷிகள் தங்களது முழுப் பலத்தையும் திரட்டிக் கொண்டு, மதீனாவை நோக்கிப் படையெடுத்தார்கள்.

இப்பொழுது, தங்களது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை முஸ்லிம்களுக்கு..! எனவே, தற்காப்பு யுத்தத்திற்குத் தயாராகுமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்புக் கொடுத்தார்கள். இதிலிருந்து தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வரிசையாகப் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது முஸ்லிம்களுக்கு. இன்னும் அனைத்துப் போர்களுக்கும் பத்ருப் போருக்கும் பல வித்தியாசங்களும், இன்னும் சிறப்புத் தகுதிகளும் இருந்தன. இது முஸ்லிம்களின் ஜீவ மரணப் போராட்ட யுத்தமாகும். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் இஸ்லாம் பாதுகாக்கப்படும். முஸ்லிம்கள் தோற்று விட்டால், இஸ்லாத்தைப் பின்பற்ற ஆள் இல்லாத அளவுக்கு அழிவு தான் ஏற்படும் என்ற நிலையில் தான் முஸ்லிம்கள் இருந்தனர்.

இந்தப் போரில் கலந்து கொண்டவர்களை இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

ஆம்..! 313 முஹம்மதுகள் ஆயிரம் அபூஜஹ்லை எதிர்க்க களம் நோக்கி வந்திருந்தனர். முஸ்லிம்களின் தரப்பில் 313 வீரர்களும், அவர்களில் 236 பேர் அன்ஸாரிகளும், 77 பேர் முஹாஜிர்களாகவும் இருந்தனர். இன்னும் முஸ்லிம்களிடம் 70 ஒட்டகங்களும், 3 குதிரைகளும் இருந்தன. இதனைக் கொண்டே மாற்றி மாற்றிப் பயணம் செய்து போர்க்களம் நாடி வந்திருந்தனர்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். இறைவா! நீ எனக்கு வாக்களித்தவற்றை நிறைவேற்றித் தருவாயாக..! இறைவா..! இந்தச் சின்னஞ்சிறு கூட்டத்தை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! என்றும் பிரார்த்தித்தார்கள்.

அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது போர்வையைப் போர்த்திக் கொண்டே அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! இறைவன் உங்களது கோரிக்கைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், விரைவில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களின் இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே களம் நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:45)

என்ற வசனத்தை இறைவன் அருளினான். இறைநத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் கொண்டே களம் நோக்கி விரைந்தார்கள்.

மேலும், அந்தச் சம்பவம் குறித்து இறைவசனம் இவ்வாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது; ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்"" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து போர் நடவடிக்கைகளைக் காண்பதற்காக, நபித்தோழர்கள் ஒரு மேடை ஒன்றை அமைத்தார்கள். அதில் அமர்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் காவலாக நின்று கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது போர் தொடங்கியது. வலது பக்க அணிக்கு அபுபக்கர் (ரலி) அவர்களும், இடது பக்க அணிக்கு அலி (ரலி) அவர்களும் தளபதிகளாக இருக்க போர் ஆரம்பமாகியது. இந்தப் போர் நடைபெறும் சமயத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அவர் குறைஷிகளின் பக்கம் இருந்து கொண்டிருந்தார். இன்னும் குறைஷிகளின் சார்பாக போருக்கும் வந்திருந்தார். போர்க்களக் காட்சியினூடே நடந்த இந்தச் சம்பவத்தை பின்னாளில் அசை போட்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் இஸ்லாமிய வரலாற்றில் இறைநம்பிக்கைக்கும், இறைநிராகரிப்பிற்கும் இடையே உள்ள கொள்கை வித்தியாசத்தை அளவிடக் கூடிய நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. ஆம்..!

ஒருநாள் மகன் தந்தையை நோக்கிச் சொன்னார். பத்ருப் போர்க்களத்தின் பொழுது, தந்தையே..! உங்களது தலை எனது வாளுக்கு மிக அருகில் வந்தது. ஆனால் நீங்கள் எனது தந்தை என்ற காரணத்தினால் உங்களைத் தாக்கமால் விட்டு விட்டேன், பெற்ற பாசம் தடுத்து விட்டது என்று கூறினார்.

அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் தாமதிக்காமல் கூறினார், மகனே..! உனது தலை எனது வாளுக்கு அருகில் அப்பொழுது இருந்திருக்குமானால்..! இந்நேரம் நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாய் மகனே..! எனது வாளுக்கு உனது தலையை இரையாக்கி இருப்பேன் என்று கூறினார்கள்.

பத்ருப் போரில் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இன்னும் தலைமை தாங்கி வந்திருந்த மிகப் பிரபலமான குறைஷித் தலைவர்கள், கொல்லப்பட்டும் விட்டார்கள். அதில் அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற குறைஷிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் அடங்குவர்.


உஹது யுத்தம், ரமளான் 3

சரியாக ஒரு வருடம் களித்து தோற்றுப் போன குறைஷிகள் மீண்டும் அபுசுப்யானின் தலைமையில் 3000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து கொண்டு, உஹது மலை அடிவாரத்தில் முஸ்லிம்களைச் சந்திக்கத் தயாரகி வந்தனர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகவே மக்காவை விட்டு வெளிக்கிளம்பி வந்திருக்கின்ற குறைஷிப் படைகளின் வருகையை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி 1000 பேர் கொண்ட முஸ்லிம் படைப்பிரிவு உஹதுக் களம் நோக்கி நரக ஆரம்பித்தது.

இடையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேஷதாரியான அப்துல்லா பின் உபையின் நயவஞ்சகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவன் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்த இயலாத நிலையில், நயவஞ்சகத்தை தனது நெஞ்சிலே வளர்த்தவனாக மாறிப் போனவன். இவன் போருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினரை தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் மதீனா நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். எனவே, இப்பொழுது முஸ்லிம் படையினரின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து எழுநூறானது.

போர்க்களக் காட்சிகளில் ஓரிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குறைஷிகளில் ஒருவன் மிகக் கடுமையாகத் தாக்கி விடுகின்றான். அவன் எறிந்த கல் ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தைப் பதம் பார்த்தது. இன்னொருவன் அவர்களது தலைக் கவசத்தின் மீது கடுமையானதொரு தாக்குதலை நடத்தினான், மூன்றாமவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் தாக்கியதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது.

படைத்தவனை நோக்கி அழைப்பு விடுக்கின்ற தன்னுடைய தூதரது முகத்தை இரத்தத்தால் காயப்படுத்துகின்ற இந்த சமுதாயம் எவ்வாறு வெற்றியடைய முடியும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வேளையில் முணுமுணுத்தபடி இருந்தார்கள்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவிழந்த நிலையில், எங்கு தனது தோழர்கள் தங்களது குறுதிகளைச் சிந்தி மரணத்தைத் தழுவிக்கிடந்தார்களோ அவர்களுடனேயே மயங்கிக் கிடந்தார்கள். இப்பொழுது குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவ வைத்தனர். போர்க்களமெங்கும் எதிரொலித்த அவர்களது வதந்திகள், முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. இன்னும் எந்தத் திக்கை நோக்கி நின்றார்களோ அந்தத் திக்கை நோக்கி, முஸ்லிம்களில் சிலர் வெருண்டோட ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் பாதகத்திலிருந்து விடுபட்ட சிறிது நேரத்திலேயே, நபித்தோழர்கள் மீண்டும் அணி திரளலானார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மயங்கிக் கிடப்பதை முதன் முதலில் அறிந்து, பிணக்குவியல்களுக்கு நடுவே இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களை இனங் கண்டு கொண்டு விட்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோள் புஜங்களைத் தூக்கி விட, தல்ஹா (ரலி) அவர்களது ஒத்துழைப்பினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது கன்னதைக் கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்த தலைக்கவசத்தைத் தனது பற்களாலேயே கடித்து அப்புறப்படுத்தினார்கள் அபூ உபைதா (ரலி) அவர்கள். அதன் காரணமாக அவர்களது இரண்டு பற்கள் ஷஹீதாக்கப்பட்டன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை இந்தளவு காயப்படுத்தி மக்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யும் நபித்தோழர்கள் வேண்டி நின்ற பொழுது கருணையே உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்களது தனது தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :

இல்லை..! நான் மக்களைச் சபிப்பதற்காக அனுப்பப்பட்ட தூதனல்லவே எனப் பதிலிறுத்தார்கள். எனவே, சபிப்பதற்குப் பதிலாக, இறைவா..! எனது மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக..! அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றார்கள்..! என்று பிரார்த்தனை புரிந்தார்கள் கருணை நபியவர்கள்.

இதனை அடுத்து அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), தல்ஹா (ரலி), மற்றும் சுபைர் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் இணைந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை பாதுகாப்பான மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்றார்கள். இந்த இடத்தில் தான் காலித் பின் வலீத் அவர்கள் எதிரியின் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்த பொழுது, காலித் பின் வலீத் ஐ எதிர்த்து அவர்களை விரட்டி விடுமாறு உமர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறுதியில் காலித் பின் வலீத் அவர்கள் தனது படையைத் திருப்பி அழைத்துக் கொண்டு போர்க்களத்தை விட்டுச் சென்று விட்டார்.

ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். போர் ஆரம்பித்த சற்றைய நேரத்திற்கெல்லாம் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, என்னுடன் மோதுவதற்கு உங்களில் யாருக்குத் தைரியமிருக்கின்றது வாருங்கள்..! என்று கூக்குரலெழுப்பிக் கொண்டிருந்தார். தனது மகனை சவாலை ஏற்றுக் கொண்டு மகனை உருவிய வாளுடன் சந்திக்கப் புறப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்களைத் தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

அபுபக்கரே..! உமது வாளை உறையிலிடுங்கள்..! அவர் பிழைத்துப் போகட்டும்..! விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

மலையில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட எழுபது நபர்களில் அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒருவராவார்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment