Sep 3, 2015

தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 05

தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி.., இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்;தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட  இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது. அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்;டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மக்கா வெற்றி

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு நடந்த முக்கியமான நிகழ்;ச்சி மக்கா வெற்றியாகும். இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பனூ சலீம், பனூ கஸீமா, பனூ ஃகஃப்பார் மற்றும் பனூ ஜஹீனா ஆகிய குலங்களை ஒருங்கிணைத்த படைப்பிரிவுக்கு தளபதியாக நியமித்து, மக்காவின் கதா என்ற பகுதியின் வழியாக நுழையும்படிப் பணித்தார்கள். இன்னும், மக்காவிற்குள் நுழையும் சமயத்தில்  மக்கா வாசிகளில் எந்தக் குலமாவது உங்களை எதிர்த்தால் என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவர்களுடன் போர் புரியுங்கள், எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னால், எந்த நிலையிலும் போரை நீங்களாகத் துவங்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இன்னும் உங்களது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தப்புனித நகரத்தில் எந்தவித இரத்தமும் சிந்தப்படக் கூடாது, இந்த நகரத்தின் புனிதத் தன்மை கெட்டு விடாது பாதுகாப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மக்கா வெற்றியின் பொழுது, 10 ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கலந்து கொண்டார்கள், இந்த எண்ணிக்கையானது மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்.

இருப்பினும், இக்ரிமா பின் அபீ ஜஹ்ல், சஃப்வான் பின் உமைய்யா, சஹ்ல் பின் அம்ர் ஆகியோரின் தலைமையில் திரண்ட மக்கத்து குறைஷி வாலிபர்கள், காலித் பின் தலைமையில் மக்காவிற்கு நுழைந்து கொண்டிருந்த படைப்பிரிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், கந்தமா என்ற இடத்தில் திரண்டார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கி வருவதைக் கண்ட அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கையை இழந்த அவர்களது, வாள்களும், ஆயுதங்களும் ஏன் பாதங்களும் கூட ஆட்டம் கண்டன. இந்தப் போரில் பனூ பக்ர் மற்றும் பனூ கதீலைச் சேர்ந்த 12 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் தங்களது பாதையைத் தவற விட்டதன் காரணமாக வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். இந்த இருவர் தான் முஸ்லிம்களின் தரப்பில் உயிரிழந்தவர்கள். இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது. இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.

மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.

· யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.

· யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

· தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

· இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.

இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.

 இணைவைப்பின் கோட்டை தகர்க்கப்படல்

மக்காவிற்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் 30 முஸ்லிம் படைவீரர்களை நக்லா என்ற இடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கத்துக் குறைஷிகளும், இணைவைப்பாளர்களும் அபயம் தேடி இருந்து கொண்டு, அங்கு உஸ்ஸா என்ற தெய்வத்திற்கு சிலை எடுத்து கோயில் ஒன்றையும் நிர்மாணித்து வைத்திருந்தனர். இணைவைப்பாளர்களின் இந்த கோயிலையும், அவர்கள் அபயம் புகுந்திருந்த அந்த கோட்டையையும் தகர்த்தெறியுமாறு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சென்ற படைக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. மேற்கண்ட இந்த நடவடிக்கை இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் போர்க்குணம் படைத்த, பயமறியாது போரிடக் கூடிய கன்னானா மற்றும் மஸார் குலத்தவர்களிடையே இந்த போர் நடவடிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த உஸ்ஸா தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில், பனூ ஹிஸாம் குலத்தின் துணைக் கோத்திரமான பனூ ஷைபான் குலத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது. இந்தப் படையெடுப்பு ஒன்றும் மிகவும் எளிதானதொரு செயலல்ல. மாறாக அது இணைவைப்பின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருந்ததால், இறைநிராகரிப்பாளர்கள் வெகு எளிதாக அதனைக் கைப்பற்ற முஸ்லிம்களை விட்டு விட மாட்டார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும், அவர்களது படையினரும் கொண்ட இறைநம்பிக்கையின் தாக்கத்தால், அந்தக் கடுமையான பணியை மிக இலகுவாக முடித்துக் காட்டினார்கள். உஸ்ஸா துண்டு துண்டாக நொருக்கித் தள்ளப்பட்டது.

ஓ உஸ்ஸாவே, நீ ஒரு பொய்க் கடவுள், உனக்கு எந்தப் புகழும் கிடையாது, எந்த இறைத்தன்மையும் கிடையாது. புகழுக்குரிய நாயனான அல்லாஹ் உனது தரத்தைத் தாழ்த்தி விட்டான், எனது கைகளினால் உன்னைச் சிறுமைப்படுத்தி விட்டான் என்று முழங்கிக் கொண்டே அதனைத் துண்டு துண்டாக ஆக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், பின் அந்தத் துண்டுகளை ஒன்றிணைத்து தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.

மக்கா வெற்றிக்குப் பின், மக்காவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு இஸ்லாத்தின் தூதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட குழு ஒன்றுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு இவரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்ட குழுவில், பைஅத்துர் ரிழ்வான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் பொழுது கலந்து கொண்ட, மதிப்புமிக்க நபித்தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துல்லா பின் உமர் (ரழி) போன்றவர்கள் இருந்தார்கள்.

பனூ கஸீமா என்றொரு நகரம் மக்காவில் இருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருந்தது.   காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழு அவர்களது நகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நகரத்து மக்கள், நகரை விட்டு வெளியே ஆயுதங்களுடன் வந்து நின்றனர். அவ்வாறு நின்ற அந்த மக்களைப் பார்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேடடார். அதற்கு அந்த மக்கள் நாங்கள் சாபியீன்கள் - அதாவது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) உடனே அந்த மக்கள் மீது போர் தொடுத்தார்கள். சிலர் கொல்லப்பட்டனர். பலர் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெகு சீக்கிரமே அவர்களது இல்லங்களிலிருந்து வெளிக் கொணரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இன்னும் மறுநாள் அவர்கள் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மற்றும் அப்துல்லா பின் உமர் (ரழி) போன்ற நபித்தோழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இன்னும் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகி விட்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம் என்றும் இருவரும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

அவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னால் ஏன் என்னிடம் சாபியீன்கள் என்று கூற வேண்டும். தயக்கமில்லாது நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாமே என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். அவர்கள் பயன்படுத்தி சாபியீன்கள் என்ற வார்த்தை மூலம் அவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்றல்லவா தெரிகின்றது என்றும் கேட்டார்கள். இன்னும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.

இமாம் இப்னு தமீமா, அல்லாமா ஐனி மற்றும் ஹாபிஸ் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவதாவது, அந்த பனூ குஸமா கோத்திரத்து மக்கள், நாங்கள் முஸ்லிம்கள் தான் என்ற பதிலைத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இது தான் ஒரு படைத்தளபதியின் அடிப்படைக் குணாதிசயங்களும், பண்புகளுமாகும், அவர்கள் தங்களது நேரங்கள் விரையமாகுவதை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மிக விரைந்து முடிவெடுத்து, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதையே விரும்புவார்கள். எனவே தான் அவர்கள் தங்களது உதடுகளில் சாபியீன்கள் என்ற வார்த்தையை மொழிந்ததுடன், இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்பதை முடிவெடுத்து விட்டார், இன்னும் எந்த முஸ்லிமும் நான் இறைநம்பிக்கை கொண்டவனல்லன் என்ற பொருள் கொண்ட வார்த்தையை என்றைக்கும் மொழிய மாட்டான். எனவே தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், உடனே தனது நடவடிக்கையைத் தொடுத்து விட்டார்கள். பனூ குஸாமா குலத்தவர்களின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கடுமையான உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் அடைந்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்த போதிலும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எந்த விதத்திலும் குற்றப்படுத்திப் பார்க்கவில்லை. ஏனெனில் இது முற்றிலும் தவறான புரிந்துணர்வின் காரணமாக எழுந்த நடவடிக்கை தான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டது தான் காரணமாகும். பனூ குஸாமா குலத்தவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், இன்னும் பொருட்சேதங்களையும் ஈடு செய்யும் பொருட்டு, பொருட்களையும், செல்வங்களையும் கொடுத்து அதற்கு ஈடுசெய்து விட்டு வருமாறு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்பும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல போர்களுக்கு தளபதியாக நியமித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள் என்பதன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் சிறப்புக்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment