Sep 1, 2015

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 01



இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.

உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.

தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.

இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பும்

மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே  எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.


உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment