Oct 8, 2013

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் முன்மாதிரிகள் யார்?

உண்மையில் இளமைப்பருவம் மனிதவாழ்வில் மிகவும் பெறுமதிவாய்ந்த பருவம். இந்த பருவத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரும் வெகுமதிகள் உண்டு. 

மறுமையில் அல்லாஹ்வினது 4 கேள்விகளுக்கு விடையளிக்காமல் ஒருவருடைய பாதங்கள் நகராது. அவற்றில் மிகமுக்கியமான இருகேள்விகள்தான் ஆயுளை எவ்வாறு கழித்தாய் என்றும் இளமையை எவ்வாறு கழித்தாய் என்றும் கேட்கப்படும் கேள்விகள் என்பதனை ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் உணர கடமைப்பட்டுள்ளார்கள்.

மாத்திரமன்றி நிழலே இல்லாத மஹ்ஷரில் அல்லாவுடைய அர்ஸூடைய நிழலை பெறும் 7 கூட்டத்தில் ஒரு கூட்டம் அல்லாஹ்வை அஞ்சி தக்வா செய்து வாழ்ந்த இளைஞர்கள் என்பதனையும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் கருத்திற் கொண்டு இவ்வுலக வாழ்வை மறுமைக்குத் தயாரிப்பு செய்ய கடமைப்பட்டுள்ளார்கள்.

துரதிஸ்டவசமாக இன்றைய இளைஞர் யுவதிகளது வாழ்க்கை முறையில் பல்வேறுவகையான ஜாஹிலிய சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்துவதனை நாம் காணலாம். குர்ஆன் சுன்னாவினது வாழ்வு கசந்து போய் மேற்கினது தாராண்மைவாதச் சிந்தனைகளும் சடவாதச் சிந்தனைகளும் மதஒதுக்கல் சிந்தனைகளும் ருசிக்கின்றதாக மாறியுள்ளதையும் அவர்களது முன்மாதிரிகளாக இச்சிந்தனைகளின் தாக்கத்திற்குட்பட்ட குப்பார்களது நடை உடை பாவனை அமைந்திருப்பதனையும் நாம் கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அல்குர்ஆன் கூறும் அழகிய முன்மாதிரியான இளைஞர் சமூகத்தை நாம் அவசியம் ஞாபகமூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் சகத்தியத்தை தேடி தனது தந்தைக்கு இறைத் தூதை எத்திவைத்த வயது 14. அவர்கள் தனது தந்தையை எதிர்கொண்டு அந்த குப்ர் சமூகத்தை எதிர்கொண்டு நும்ருத்தை எதிர்கொண்டு நெருப்பில் வீசப்பட்ட போது அவர்களுக்கு வயது 16. இது இன்றைய எமது O/L எடுத்த மாணவனது வயதாகும். சற்று சிந்தனை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் எமது தீனுல் இஸ்லாம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களது வழியில் வந்த மார்க்கமாகும்.

ஒழுக்கம் பண்பாடு அடக்கம் நாணயம் நம்பிக்கை தக்வா போன்ற அனைத்துக்கும் முன்மாதிரியான அல்லாஹ் வர்ணிக்கும் ஒரு இளைஞன்தான் நபி யூசுப் (அலை) அவர்கள். இவர்கள் வாழ்கை முறையை முன்மாதிரியாக ஒரு சூறாவையே அல்லாஹ் எமக்கு இறக்கியருளியுள்ளான்.

அதேபோன்றுதான் நபி மூஸா (அலை) மும் அவர்களது சகோதரரும் பிர்அவ்னுக்கு தஃவத் கொடுக்கச் சென்ற போது அவர்கள் இளைஞர்களாகவே இருந்தார்கள் என்பதனை அல்குர்ஆன் அழகிய முறையில் விளக்குகிறது.

இவற்றிற்கு மேலாக நாம் நபியாக ஏற்றுள்ள எமது தூதர் (ஸல்) அவர்கள் அல்அமீன் என்றும் அஸ்ஸாதிக் என்றும் அழைக்கப்பட்ட ஒரு இளைஞனாக அன்றை ஞாஹிலிய சமூகத்தில் திகழ்ந்தார்கள். எப்போதும் மதுவுக்குப்ப பின்னாலும் மாதுக்குப் பின்னாலும் சென்ற மக்கள் மத்தியில் முன்மாதிரியான ஒரு இளைஞனாக வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது முன்மாதிரகள் இன்றை நவீன ஜாஹியத்தில் எமது இளைஞர்களிடம் எங்கேயுள்ளது? சிந்திக்க வேண்டாமா?

அது மாத்திரமா அன்று நபி (ஸல்) அவர்களை ஏற்று அவர்களுக்கு பக்கபலமாக இருந்து தீனுல் இஸ்லாம் முழு உலகிலும் பரவக் காரணமான உத்தம சஹாபக்களில் 10 வதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களாகவே இருந்தார்கள்.

மேலும் இஸ்லாமிய வீரவரலாற்றில் சாதனை படைத்த எத்தனையோ தளபதிகள் இளைஞர்களாகவே இருந்தார்கள்.

1.சிந்து பிரதேசத்தை கைப்பற்றிய போது முஹம்மதுபின் காஸிமுக்கு வயது 17.
2.கொன்ஸ்தான்து நோபிளை கைப்பற்றி முஹம்மதுபின் பாதிஹின் வயது 23.
3.ஸ்பைனை கைப்பற்றிய தாரிக் பின் சியாத்திற்கு வயது 21.

இவ்வாறு வரலாறு நெடுகிலும் இஸ்லாத்தினை வாழவைப்பதற்கும், அதன் தூதை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதற்கும் முன்னணியில் திகழ்ந் எமது வீரவலாறுபடைத்த இளைஞர் சமூகம் முன்மாதிரியாக உள்ள போது இன்றை எமது இளைஞர்களுக்கு “சினிமா ஸ்டார்களும்” “விளையாட்டு வீரர்களும்” முன்மாதிரியாக திகழும் துர்ப்பாக்கிய நிலையில் எமது இளைஞர்க சமூகம் வழிநடாத்தப்படும் இழிநிலையில் உள்ளதை நினைக்கும் போது பெரும் வேதனையுடன் கவலையும் தோன்றுகிறதல்லாவா?

ஆகவே, இன்றைய எமது இளைஞர் யுவதிகள் எமது முன்னோர்களது அழகிய முன்மாதிரிகளை பின்பற்றி அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் பெறும் நல்லோர்களது கூட்டத்தில் சேர பிரார்திப்போம்.

அவர்களுக்கு இச்செய்திகளை எடுத்தியம்பி அவர்களது வாழ்வு ஈருலகிலும் ஈடேற்றம் பெற உழைப்போம்!


by Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment