Sep 24, 2013

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?



ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில் கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது. ஹஜ் கடமையை நிறைவேற்ற விசா இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றுவந்த அந்த காலகட்டங்களில், இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்கும் கலீஃபாவையோ அல்லது கலீஃபாவின் பிரதிநிதியையோ சந்தித்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

இஸ்லாமிய அரசிலிருந்து துண்டாடப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு பிரிட்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிறகு ஹஜ்ஜை சவூது குடும்பத்திலிருந்து முடிசூடும் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதற்காக சவூதி ராஜா தன்னை இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் என்று பெருமையாக கூறிக்கொள்கிறார். அமெரிக்காவின் ஏஜெண்டான சவூதி ராஜா வீழ்வது உறுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.மேலும் முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசு இந்த பூமியில் மீண்டும் வருவது உறுதி என்பதாக ஏராளமான நபிமொழிகள் சான்று பகர்கின்றன.எனவே ஹஜ்ஜை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக இருந்தது போன்று மீண்டும் உலக முஸ்லிம்களின் அமீரின்கீழ் வந்துவிடும். இந்நிலையில் இஸ்லாமிய அரசு எவ்வாறு ஹஜ்ஜை வழிநடத்தும் என்பதை சுருக்கமாக காண்போம்.

இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை அதிகமான மக்கள் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தரவேண்டியது இஸ்லாமிய அரசின் கடமையாகும். இப்போது சவூதி ஏற்படுத்தியுள்ள ஹாஜிகளிடமிருந்து வருமானம் சம்பாதிக்கும் வழிமுறைகள் மற்றும் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டு, ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துத்தந்து ஹஜ்ஜை எளிமைப்படுதுவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும்.

ஹரமில் தற்போது 35 - 40 லட்சம் மக்களை மட்டுமே கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது. முஸ்லிம் உம்மத்தின் எண்ணிக்கையையும் வருங்கால எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக இந்த இடவசதியை மேம்படுத்துவது இஸ்லாமிய அரசின் முதல் சவாலாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மஸ்ஜிதுல் ஹராமின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாகும்.

சவூதி ராஜாவாக இருந்த ஃபஹத் 1982 ல் ஹரம் ஷெரீஃபை விரிவுபடுத்தினார்; அது மன்னர் ஃபஹதின் விரிவு என அறியப்படுகிறது. தற்போதுள்ள ராஜாவான அப்துல்லாஹ்வும் மற்றொரு விரிவாக்க திட்டத்தை அறிவித்துள்ளார். அது 2020 ஆம் ஆண்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் ஃபஹத் விரிவாக்கத் திட்டதின்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றி நிறைய நிலங்கள் தேவைப்பட்டது. எனவே ஆயிரக்கனக்கான வீடுகள் (சிறப்பு மிகுந்தவை உட்பட) அழிக்கப்பட்டன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவற்றில் பெரும்பகுதி முஸ்லிம் அல்லாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ஹரம் ஷெரீஃபில் நுழைய அனுமதி இல்லாதவர்களுக்கு ஹரமை சுற்றி ஹோட்டல்களை அமைக்க சவூதி அரேபிய ராஜா வழி ஏற்படுத்திக் கொடுத்தார். ரேடிசன், ஷெரட்டன், இண்டர்காண்டிநென்டல் போன்ற நிறுவனங்களுக்கு ஹரமை சுற்றி பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. புனித நிலங்களை அசுத்தமானவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து சவூதி ராஜா புளகாங்கிதம் அடைந்தார். எனினும் ஹஜ் வகுப்புகளை தேர்ச்சியுடன் நடத்தும் சவூதி அறிஞர்கள் மவுனம் காத்தனர். சமீபத்தில் அமெரிக்காவின் பாரிஸ் ஹில்டன் தன்னுடைய கிளையை மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள வணிக வளாகத்தில் திறந்துவைத்தபோது உலக முஸ்லிம்கள் வருந்தினர்..

இத்தகைய விரிவாக்கத் திட்டம் சவூதி அரேபிய ராஜாவிற்கு அரசியல் மைல்கல்லாகியது போன்றே அவருடைய குடும்பத்தினருக்கும் மக்காவில் ரியல் எஸ்டேட் மூலம் சொத்துக்கள் கொழிக்க உதவியது தற்போதைய சவூதி அரேபிய ராஜாவின் திட்டப்படி, உட்புற மற்றும் வெளிப்புற தொழுகை இடங்களை சேர்த்து 3,56,800 ச.மீ (88.2 ஏக்கர்) 40 லட்சம் ஹாஜிகளை உட்கொள்ளவே போதுமானது. மஸ்ஜிதுல் ஹராமின் வடமேற்கில் 15 லட்சம் ச.மீ அளவில் பிரம்மாண்டமான ஷாமியா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அல் ஷாமியா, கரோல், அல் கரரா வ அல்கா போன்ற திட்டடங்களின் மூலம் 30 லட்சம் ச.மீ வரை நிலங்கள் நீட்டப்பட்டு பல உணவகங்கள், கடைவீதி , பணம் புழங்கும் சந்தை மற்றும் குடியிருப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் வர இருக்கின்ற இஸ்லாமிய அரசு, அதிக எண்ணிக்கையில் வரும் ஹாஜிகளை உட்கொள்ளும் அளவிற்கு ஹரமை சுற்றி திறந்த வெளியை அதிகரிக்க முற்படும். கோடைக்கால வெயிலின் வெட்கையை தணிக்க மதீனாவில் அமைந்துள்ளதைப் போன்ற காற்று வசதி ஏற்பாடுகளையும் இயந்திர குடைகளையும் பயன்படுத்தலாம். இதுவே இஸ்லாமிய அரசின் முதற்திட்டமாக அமையும்; இதைத்தொடர்ந்து மற்ற வசதிகள் செய்துதரப்பட்டு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். ஹரமிற்கு அருகிலுள்ள இடங்களை மட்டும் பளிங்கு தரை கொண்ட தொழுமிடமாக மாற்றினால் 45 லட்சம் முஸ்லிம்களை உட்கொள்ளும். இதையே இரண்டடுக்கு கொண்ட இடமாக மாற்றினால் இரட்டிப்பு எண்ணிக்கையில் மக்களை உட்கொள்ளும்.

ஆனால் தற்போது அல் ஷாமியா உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2,50,000 மக்களுக்கு தேவையான உணவகங்கள், தங்குமிடம் மற்றும் 4 லட்சம் பேர் தொழுமிடம் மட்டுமே அமைக்க இயலும்.ஜபல் உமர் திட்டத்திற்காக ஹரமின் தென்மேற்கு பகுதியுலுள்ள 600க்கும் மேற்பட்ட நிலங்கள் கைப்பற்றப்பட்டு (24,480 ச.மீ) அதில் 935 அறைகள் கொண்ட 5 நட்சத்திர உணவகமும், 1255 அறைகளைக் கொண்ட 3 நட்சத்திர உணவகங்களாகவும் கட்டப்படவுள்ளது. மேலும் 1 லட்சம் பேர் உட்கொள்ளும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்களும், 520 உணவகங்களும், 4360 கடைகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 1 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் வகையில் 6 மாடி கட்டிடம் கட்டும் திட்டமும் உள்ளது.

ஜபல் உமர் திட்டம் முன்னர் குறிபிட்டது போல் நிழற்குடைகளையும், காற்று வசதிகளையும் கொண்ட தரை அமைக்கும் திட்டமெனில், அது 7.5 லட்சம் ஹாஜிகளை தொழுகைக்கு உட்கொள்ளும் இடமாக அமையும். மற்றொரு திட்டமான ஜமல் கந்தமாவின்படி 6 லட்சம் ச.மீ நில பரப்பு கலப்பு இடங்களான உணவகங்கள் , கட்டிடங்கள் மற்றும் சந்தைகளாக உருவாகிக்கொண்டிருக்கிறது.இதை தொழுகை இடமாக மாற்றினால் 20 லட்சம் முஸ்லிம்களுக்கு இடமளிக்கும். மேற்கூறிய அணைத்து திட்டங்களும் ஹரமை சுற்றியுள்ள இடங்களைக்கொண்டு உருவாக்கப்படுகிறது, எனவே இவை அனைத்தையும் ஹரமுடன் எளிமையாக இணைத்துவிடலாம்.

ஏறக்குறைய அனைத்து திட்டங்களுக்கும் பெறப்பப்பட்ட இடங்கள் சிறு ஈட்டுத் தொகைக்கு அல்லது நஷ்ட ஈடு கூட இல்லாமல் சவூதி அரசால் பெறப்பட்டவையாகும். இன்னும் சில இடங்கள் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த கால அவகாசம் கொடுத்து காலி செய்யப்பட்டன.

46,000 ச.மீ கொண்ட மற்றொரு திட்டமான ஜபல் காபா. அப்ரஜ் அல் பய்த் கோபுரம் கட்ட புல்புல் மலையிலுள்ள அஜ்யத் கோட்டை அழிக்கப்பட்டது. இந்த கோபுரமும் மற்ற கோபுர வடிவங்களும் கஃபாவின் புனிதத்தை மீறிய செயலாகும். ஒருபுறம் விமானங்கள் ஹரமிற்கு மேல் பறந்து செல்லக்ககூடது என்பதும் மறுபுறம் ஹரமை விட கோபுரங்கள் உயர்ந்து நிற்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது.

மார்க்க சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏழு மஸ்ஜிதுகளில் அபுபக்கர்(ரலி), சல்மான் பார்சி(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), பாத்திமா(ரலி) ஆகியோர் பெயரிலிருந்த ஐந்து மஸ்ஜிதுகள் சவுதி அரேபிய அரசால் அழிக்கப்பட்டுள்ளன. நபி صلى الله عليه وسلم அவர்களின் மனைவியர்களில் ஒருவரான கதிஜா(ரலி) அவர்களின் வீடு பொது கழிப்பிட வசதிக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்களின் உற்ற தோழரான அபூபக்கர்(ரலி) அவர்களின் வீடு தற்போது ஹில்டன் உணவகத்திற்காகாகவும், அலி உரைத்தின் வீடும் அபு குபைஸ் பள்ளியும் தற்போதுள்ள அரசு மாளிகைக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த இடம் நூலகத்திற்காகவும் இடிக்கப்பட்டது. தற்போதுள்ள அப்ரஜ் அல் பைத் கோபுரம் உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த அஜ்யத் கோட்டையை இடித்தும் கட்டப்பட்டவையாகும்.

இன்னும் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சவூதி மன்னர்களால் காரணமின்றி அழிக்கப்பட்டுள்ளன. தற்போது நபி صلى الله عليه وسلمஅவர்களின் காலத்து வரலாற்று இடங்களில் இருபதிற்கும் குறைவானவையே மிஞ்சியுள்ளன.

தற்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டு மார்பிள் கல் பொறிக்கப்பட்ட திறந்த வெளியாக மாற்றப்பட்டால் குறைந்தது ஒரு கோடி நபர்களுக்கு இடமளிக்கும்.அபு குபைஸ் மலையில் 1 லட்சம் ச.மீ பரப்பளவில் உள்ள சவூதி ராஜ மாளிகையை இடித்தால் இன்னும் இடவசதி கிடைக்கும்.

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் சில அமைப்பு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக , மதாஃப் (தவாஃப் பகுதி ) விரிவாக்கப்படவேண்டும் வேண்டும். உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த தடுப்பை அகற்றுவதன் மூலமாக தவாஃப் பகுதி மேலும் விரிவடையும்.

குழைந்தகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் நகரும் நடைபாதைகளை மேல் மாடிகளில் இஸ்லாமிய அரசு அமைத்துக்கொடுக்கும். இது ஹாஜிகளுக்கு உதவுவது மட்டுமல்லாது சக்கர நாற்காலியின் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றுப்பெறும்.நகரும் நடைபாதையை பயன்படுத்துவதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியப்படுகிறது.

طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்துகஃபாவை தவாஃப் செய்தார்கள்.. அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

(இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி)

அதைப்போலவே நகரும் நடைபாதையை சஃப்வா மர்வாவிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் இரண்டாவது சவால், மக்கவாசிகளுக்கும் ஹாஜிகளுக்கும் தங்குவதற்கு வீடு அமைத்து தருவதாகும். மக்காவைச்சுற்றி பல மலைகள் உள்ளன. இந்த மலைகளை அகற்றுவதின் மூலம் பெரும் பிரச்சனை தீரும்.முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இஸ்லாமிய அரசுடைய நவீன திட்டங்களை மென்மேலும் அதிகரிக்கவேண்டியிருக்கும்.. அத்தருணத்தில் அரசு மக்காவை சுற்றி செயற்கை நகரங்களை உருவாக்கி ஹாஜிகளையும் ஊர்வாசிகளையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எனினும் அது விரைவில் நடக்க கூடிய நிகழ்வு அன்று; மாறாக முழு உலகமும் இஸ்லாத்தை தழுவும் போது இந்நிகழ்வு நடைபெறும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக தமீம் அத்தாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-

لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ

“ இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குஃப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.” (முஸ்னத் அஹ்மத், ஹாகிம்)

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் ஹாகிம் குறிப்பிடுகிறார்கள. இரவு பகல் சென்றடையும் பிரதேசங்கள் என்பது முழு உலகிலும் இஸ்லாம் பரவுவதைக் குறிக்கும்.

இஸ்லாமிய அரசுக்கு மூன்றாவது பெரிய சவாலாக அமைவது போக்குவரத்தாகும். தற்போதுள்ள அனைத்து போக்குவரத்து அமைப்பும், பொது போக்குவரத்து அமைப்பும் (MRTS ) அவசியம் மேம்படுத்தப்படவேண்டும். MRTS புனித பகுதிகளில் (மக்கா, மினா , முஸ்தலிஃபா, அரஃபா ) போன்ற இடங்களில் முதலாவதாக அமைக்கப்பட்டு பின்பு பிற புனித ஸ்தலங்களுக்கும் விரிவாக்கப்படும்.

MRTS ன் வடிவம் மற்றும் கட்டமைப்பு பூமியின் அடியில் பல இணைப்புக்களைக் கொண்டதாக அமையும். இவை கூட்ட நெரிசல்களைக் குறைத்து இலகுவாக செல்ல கட்டப்படுவதாக அமையும். மலேசியா, டெல்லி, லண்டன் போன்ற இடங்களில் உள்ள MRTS இயங்கும் முறையை அறிந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் இரயிலில் ஏறும் எண்ணிக்கையை பொறுத்து, பெரும் அசம்பாவிதங்களும், கூட்ட நெரிசல்களால் ஏற்படும் விபத்துகளும் இல்லாத வகையில் இரயில்களின் எண்ணிக்கை அமைய வேண்டும்,

கடந்த வருடம் அரஃபாவில் மெட்ரோ இரயில் நிலையங்களில் பல மக்கள் இறந்தனர். அதற்கு காரணம் அங்கு 4000 நபர்கள் ஏறிச்செல்லக்கூடிய 21 ரயில்கள் மட்டுமே உள்ளது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் கூட்ட நெரிசல் அதிகரித்து மூச்சு திணறலிலும் மிதிப்பட்டும் ஹாஜிகள் உயிரிழந்தனர். இஸ்லாமிய அரசு முஸ்லிம்களின் உயிர்களை சோதனைக்கு உள்ளாக்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே ஹாஜிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் பொதுபோக்குவரத்தைப் பொறுத்தவரையில் நகரத்திற்குள் மிகவும் பிரச்சனைக்குரியதாகும். தற்போது தெருக்கள் குறுகியதாகவும் சரியான பராமரிப்பின்றியும் இருக்கின்றது. தனி நபர் வாகனங்கள் ஹரம் மற்றும் அரஃபா போன்ற இடங்களில் அனுமதிக்கப்படமாட்டாது, மாறாக இத்தகைய இடங்களில் அரசு வாகனங்கள் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் .

மினா, முஜ்தலிஃபா மற்றும் அரஃபாவில் உள்ள சவால்களை பொறுத்தவரையில் இந்நகரங்கள் மக்காவை விட சிறியதாகவும் மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. மலைகள் தகர்க்கப்பட்டு பெரும் கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மினாவில் தங்குவது தான் சுன்னத்தாகும். அதற்காக திறந்த வெளி கூடாரங்களில்தான் தங்கவேண்டும் என்றில்லை. சவுதி அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளாததற்கு காரணம் முதலீட்டிற்கு ஏற்ற வருமானம் வராது என்பதாகும். இஸ்லாமிய அரசின் வரவு என்பது முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை இலகுவாக்குதலால் கிடைக்கும் நற்கூலியாகும்.

தற்போது இம்மூன்று நகரங்களில் உள்ள பிரச்சனை போக்குவரத்தும் இடவசதியுமாகும் . MRTS சேவை போக்குவரத்து பிரச்சனையையும், அடுக்கு மாடி கட்டிடங்கள் இடப்பற்றாக் குறையையும் தீர்க்கும். தற்போதுள்ள ஜமராத் திட்டம் சிறப்பாகவும் நிறைய ஹாஜிகளை உட்கொள்ளும் வகையில் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஹாஜிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தல் இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். உப்புத் தண்ணீர் சுத்தகரிக்கும் ஆலை ஜித்தாவில் நிறுவப்பட்டும், நகரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மற்ற புனித ஸ்தலங்களிலும் ஜம் ஜம் நீர் கிடைத்திட வழி வகையை அரசு மேற்கொள்ளும். உணவு தரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவில் கலப்படம் மற்றும் அதிக பணம் வசூலித்தல் போன்றவை தடுக்கப்படும்.

மக்காவில் ஹாஜிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுபோன்றே மதீனாவிலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இஸ்லாமிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இஸ்லாமிய அரசான கிலாஃபா நபிصلى الله عليه وسلم அவர்களின் வழியில் ஏற்பட அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

No comments:

Post a Comment