Mar 2, 2011

பொருளாதார மேற்பார்வை- பகுதி 1

இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பைப்பற்றி விவரிப்பதற்கு முன்னால், இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான 'பொருள் தேடல்", 'பணம் சம்பாதித்தல்' என்பதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பது பற்றி விவரிப்பது அவசியம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் 'துன்யா" எனும் இவ்வுலக வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது, சொத்துக்கள் சேர்ப்பது போன்றவற்றை ஒரு மோசமான செயலாக, இஸ்லாத்திற்கு தொடர்பற்ற ஒன்றாக கருதுகின்றனர்.

தீனையும் துனியாவையும் பிரித்துப்பார்ப்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் அம்சமாகும். ஆனால் அது முஸ்லிம்கள் மத்தியிலும் தீவிரமாகப் பரவிவிட்டது. அதன் விளைவாகவே பொருள் சேர்ப்பது என்பது ஒரு மட்;டமான விசயமாகவும், ஏனைய இபாபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதென்பது ஒரு உயர்ந்த செயலாகவும் கருதப்படுகிறது. இதனால் குழப்பத்திற்குள்ளான பல முஸ்லிம்கள் இரட்டை வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அதாவது, பொருள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் இபாபத்தான செயல்களை விட்டுவிட்டோமே என வருந்துகின்றனர்.

இஸ்லாமியப் பொருளாதாரம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதனாலேயே இத்தகைய குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. துறவறத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எதிர்ப்பதன் மூலம் இவ்வுலக இல்லற வாழ்வில் ஈடுபடுவதை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இவ்வாழ்விற்குத் தேவையான பொருள் சேர்ப்பதை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் சில சமயங்களில் பொருள் தேடுவதை கட்டாயமாக்கியுள்ளது, அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்(62:10)
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (2:275)

மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள். எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! (28:77)

நபிகளார்(ஸல்) அவர்களின் சுன்னாவை ஆராயும் பொழுது, நபிகளார் நமக்கு கற்றுத்தந்த துஆவின் மூலம் பொருள் தேடுவது ஹலாலாக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். நபிகளார் (ஸல்) கற்றுத்தந்த அந்த துஆ பின்வருமாறு அமைகிறது.

'யா அல்லாஹ், இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் எமக்கு நல்லதையே அருள்வாயாக"
இருந்த போதிலும் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அல்லாஹ்(சுபு) நம்மை எச்சரிக்கவும் செய்கிறான்.

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது (102:1)

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (89:20)
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான் (100:8)

நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (11:10)

இவ்விரு வேறுபட்ட வசனங்களை நோக்கும் போது ஒரு விசயம் தெளிவாகிறது. அதாவது, நமது வாழ்வின் முக்கியக் குறிக்கோள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகட்கு கீழ்ப்படிந்து, அவன் காட்டிய, அவன் அனுமதித்த வழியில் நமது மனித வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். எனவே இவ்வுலகில் வாழத் தேவையான அனைத்தையும் சம்பாதித்துக்கொள்வதென்பது அவசியம். எனினும் வாழ்வில் பொருள் தேடுவது என்பது அவசியம் என்பதற்கும், பொருள் தேடுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளத் தவறியதே இஸ்லாமியப் பொருளாதாரத்தின் குழப்பத்தினை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த உண்மையான இஸ்லாமிய நோக்கம் இல்லாவிட்டால் இத்தகைய பொருள்தேடும் முயற்சிகள் இஸ்லாத்திற்கு எதிராகவே அமையும்.

எனவே இவ்வுலக வாழ்வில், பொருளாதார அடிப்படை, தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இறைவன் கூறிய வழியிலேயே அமையவேண்டும்.

நபிகளார் கூறுகிறார்கள்

'என்றென்றும் வாழ்வது போல எண்ணி இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேடுங்கள், மறுநாளே இறப்பது போல எண்ணி மறுவுலகிற்காக அருள் தேடுங்கள்".

இஸ்லாத்தில் பொருளாதாரப் பிரச்சனை

மேற்குலகக் கொள்கையான மூலதனக் கொள்கையைப் போலல்லாமல், இஸ்லாம் பொருளாதரப் பிரச்சனையை வேறுவிதமாக அணுகுகிறது. அதாவது பொருளாதாரப் பிரச்சனையின் முக்கிய அம்சம் வளத்தினை மக்களிடையே சரியாகப் பங்கிடுவதேயாகும். ஆனால் மேற்குலகோ உற்பத்தியையே முக்கிய அம்சமாகக் கருதுகிறது. அதாவது, உலகின் வாழ்வாதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளதாகக் கருதி, உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அப்பற்றாக்குறையை சரிசெய்துவிடமுடியும் எனக் கூறுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு உற்பத்தி பெருகுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மக்கள் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என மேற்குலகு கருதுகிறது.

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை ஏனைய வசதிக்கான தேவைகளிடமிருந்து இஸ்லாம் பிரித்துப் பார்க்கிறது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றக் கூடிய அளவிற்கு வளங்கள் இவ்வுலகில் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதன்படி பொருளாதாரப் பிரச்சனை என்பது அவ்வளத்தைப் பகிர்ந்தளிப்பதிலேயே உள்ளது. உலகின் மூன்றாந்தர நாடுகளாகக் கருதப்படும் நாடுகளிலும் ஒருசில மனிதர்களிடம் செல்வம் குவிந்திருப்பது, சில நாடுகளில் அதிகப்படியான விளைச்சலை அழிக்கப்பட்டு வருவது போன்றவற்றைக் காண்கையில் அக்கூற்று உண்மையென்றே விளங்குகின்றது. இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கையின் படி, ஐரோப்பிய நாடுகளில் நடப்பதைப்போல உணவு விளைச்சலை வேண்டுமென்றே குறைப்பதும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகப்படியாக விளைந்த காபியை எரித்ததைப்போல அதிகப்படியான விளைச்சலை அழிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பயிருக்குப்பதிலாக பணப்பயிர்களை விளைவித்தது ஒருசிலரின் நன்மைக்காக மட்டுமே. எதியோப்பியாவில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டபோதும் கூட அந்நாடு கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்துகொண்டுதான் இருந்தது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்

“அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்துவானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்குவசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணிவிட முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.” (14:32-34)

“நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சொத்து)களை வழங்குகிறான். (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (17:30)
இந்த வசனங்களின் மூலம் மனித வர்க்கத்திற்குத் தேவையானவற்றை நிவர்த்தி செய்யும் அனைத்து வளங்களையும் படைத்துவிட்டதாக அல்லாஹ்(சுபு) அறிவிக்கிறான்.

இஸ்லாம், உற்பத்தித் திறன் பற்றிய பொருளாதார அறிவையும், அதனை பகிர்ந்தளிக்கும் பொருளாதார அமைப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அதாவது சொத்துக்களை அடையும் வழிவகைகளையும் அதனை அனுபவிக்கும் அல்லது விற்பனை செய்யும் வழிவகைகளையும் தனது சட்டங்கள் வாயிலாக தெளிவாக விளக்கியுள்ளது.

இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் குறிக்கோள்
இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் முக்கியக் குறிக்கோள்களாவன,

1. இஸ்லாமிய அரசின் கீழுள்ள ஒவ்வொரு மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்தல்.

2. அதிகப்படியான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள, அனுபவிக்க வழிவகை செய்து கொடுத்தல்.

3. மேற்கண்டவற்றை, ஒரு இயல்பான அமைப்பின் மூலம் செயல்படுத்தி, உழைப்பிற்கேற்ற கூலி என்ற வகையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுதல்.

குறிக்கோளை அடையும் வழிமுறைகள்

சொத்துக்களை அடைதல் (சொந்தமாக்குதல்)

இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் குறிக்கோள்களை அடையும் வழிமுறைகளில் சொத்துக்களை சொந்தமாக்குவது ஒரு முக்கிய வழிமுறையாகும். சொத்தின் உரிமையாளர் மட்டுமே அதனை அனுபவிக்கவோ அல்லது விட்டுவிடவோ முடியும். இஸ்லாத்தில் சொத்துக்கள் அனைத்தும் அல்லாஹ்(சுபு) ஒருவனுக்கு மட்டுமே முழுமுதற்சொந்தம் என்பது தெளிவு. எனவே சொத்துக்களை அடைதல் என்பதற்கு அதன் தற்காலிக பாதுகாவலராக பொறுப்பேற்றுக்கொள்ளல் என்றே பொருள் கொள்ள வேண்டும்.


வளங்களை அடைவது இரண்டு வகையில் அடங்கும். தாம் நேரடியாக ஈடுபட்டு அதன் மூலம் உற்பத்திப் பெருக்கத்தால் லாபம் ஈட்டி சொத்துக்களை அடைதல் ஒருவகையாகும். மற்றொன்று மறைமுகமாக சொத்துக்களை அடைதல். அதாவது, அல்லாஹ்(சுபு)வே எல்லா சொத்துக்களுக்கும் அதிபதியாதலால் அவன் கட்டளைப்படி நேரடியாக உழைத்து வளங்களை அடைபவர் அதிலிருந்து ஒரு பகுதியை பிறருக்கு பங்கிடுவதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான வளங்களைப் பெறுவது இரண்டாம் வகையில் அடங்கும். அல்லாஹ்(சுபு) விவரிக்கிறான்

“அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக”(24:33)


இது ஷக்காத், கப்பராத், சதக்காத் மற்றும் பரம்பரைச் சொத்து போன்றவையாகும். இத்தகைய சொத்துக்களை, வளங்களை இறைவனின் கட்டளையை மீறாமல் பங்கிடுவது, அரசின் முக்கியக்கடமையாகும்.
இருந்த போதிலும் தனிமனிதன் அடையும் சொத்துக்களுக்கு உட்ச வரம்பு எதுவும் இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அவற்றினை அடையும் வழிகளை இஸ்லாம் கட்டுப்படுத்துகிறது. யூகத்தின் அடிப்படையில் லாபம் ஈட்டுதல், அதிஷ்;ட சீட்டிழுப்புகள், வட்டியின் அடிப்படையில் தொழில் புரிதல் போன்றவற்றை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

மேலும் சிலவகையான சொத்துக்கள் முஸ்லிம் உம்மா அனைத்திற்கும் பயனளிக்கின்ற வகையில், முஸ்லிம் உம்மாவின் நலன்களை பாதுகாக்கின்ற பிரதிநிதியான, கலீஃபா மூலம் நிறைவேற்றப்படும். அத்தகைய சொத்துக்களை தனிநபர் எவரும் அடைய முடியாது. நீர், மேய்ச்சல் நிலம், எரிசக்தி மூலங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இந்த வகையில் அடங்கும்.

சொத்துக்களை உரிமை கொள்ளும் அத்தகைய வழிமுறைகள் மூலம் ஒவ்வொருவரும் இறைவன் தமக்கு வழங்கியவற்றை பெற்றுக் கொள்வர். மேற்குலகின் மூலதனக் கொள்கையில் யார் நேரடியாக சொத்துக்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ, அவர் மட்டுமே பயனடைவார். மேலும் இஸ்லாத்தில் சொத்து சேர்ப்பதில் உச்ச வரம்பு இல்லாததால் தத்தம் உழைப்பிற்கேற்ப அதிக சொத்துக்களையும் வசதிகளையும் அடைய முடியும்.

தொடரும் )

No comments:

Post a Comment